குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

குளித்தலை,

தமிழக அரசு அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தை, குறிப்பிட்ட தேதி அறிவித்து அனைத்துத்துறை அலுவலர்களையும் வரவழைத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையாக நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநில பொது செயலாளர் நம்புராஜன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியவர்கள் நேற்று குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோட்டாட்சியர் (பொறுப்பு) கணேஷ் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் தற்போது நடத்தப்படுவதாகவும், இதில் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கலாம் என தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை

இதற்கு உடன்படாத இச்சங்கத்தினர் திடீரென நடத்தும் இக்கூட்டத்தில் மனு அளிக்க முடியாது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்படவேண்டுமென தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படவுள்ள தேதி குறித்து அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு கடிதம் அளிக்கவேண்டுமென வலியுறுத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் குளித்தலை கோட்ட அளவில் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த முகாமில் அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊராக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை, ஊதியம் கிடைத்திட சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுமென முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டக்குழுவினர் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இதில் பங்கேற்ற பலர் தங்களுடைய மனுக்களை அதிகாரிகளிடம் அளித்துச் சென்றனர்.


Next Story