திண்டுக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயார் - நாளை மறுநாள் வெளியீடு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உத்தரவிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள் உள்ளன. இதுதவிர 23 பேரூராட்சிகள் மற்றும் 306 ஊராட்சிகள் இருக்கின்றன.
இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை கொண்டு, உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் அச்சடிக்கப்பட்டு, தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. மேலும் அடுத்த சில வாரங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
எனவே, நாளை மறுநாள் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல், உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட உள்ளது. அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில், வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story