கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர் பாலசண்முகம், வட்ட இணைச்செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் துரை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜாமந்திரி, மாவட்ட இணை செயலாளர் கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். இதில் அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வுபெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்கள் உள்ளிட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறாத அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல் மாநில அரசும் ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் மருத்துவபடியை ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் வழங்க வேண்டும். அரசாணை 56-ஐ ரத்து செய்து, அனைத்து காலி பணி இடங்களையும் நிரப்ப வேண்டும். காப்பீட்டுத்திட்ட குறை தீர்க்கும் கூட்டத்தை மற்றும் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் காலமுறை கூட்டத்தை முறையாக அரசு ஆணைப்படி நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story