தூசி அருகே, குடும்ப தகராறில் மாமியார் அடித்துக்கொலை - 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது


தூசி அருகே, குடும்ப தகராறில் மாமியார் அடித்துக்கொலை - 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2019 5:00 AM IST (Updated: 2 Oct 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே குடும்ப தகராறில் மாமியார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூசி, 

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள சித்தாலபாக்கத்தை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மனைவி முனியம்மாள் (வயது 55). இவர்களது மகன் வெங்கடேசன். அவருடைய மனைவி ஜோதி. இருவருக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் முனியம்மாள் அவருடைய மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். அப்போது ஜோதிக்கும், முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது முனியம்மாள், ஜோதியை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜோதி நேற்று முன்தினம் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த முனியம்மாள் மீது வெந்நீரை ஊற்றினார். பின்னர் கம்பால் முனியம்மாள் தலை மீது தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து ஜோதி காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த கம்மராஜபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய் வீட்டில் பதுங்கி இருந்த ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜோதிக்கு அவரது தந்தை ஏழுமலை, தாயார் கண்ணியம்மாள் (65), சகோதரன் விநாயகம் (32) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்ணியம்மாள், விநாயகம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.

மாமியாரை மருமகளே அவரது குடும்பத்துடன் சேர்ந்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story