காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் கவுதம் குமார் வெற்றி பெற்றார். இதன் மூலம் காங்கிரஸ் வசம் இருந்த மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது. அதுபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் துணைமேயர் பதவியை பா.ஜனதாவிடம் இழந்தது.
பெங்களூரு,
கர்நாடக நகர-மாநகராட்சிகள் சட்டத்தின்படி மாநகராட்சி மேயரின் பதவி காலம் ஓராண்டு மட்டுமே ஆகும்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம் ஆண்டுதோறும் தேர்தல் நடத்தப்பட்டு மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி மன்றத்தின் 4-வது ஆண்டு மேயராக இருந்த கங்காம்பிகேவின் பதவி காலம் கடந்த மாதத்துடன்(செப்டம்பர்) நிறைவடைந்தது.
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் தற்போதைய மன்றத்தின் 5-வது ஆண்டு மேயரை தேர்ந்தெடுக்க 1-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடத்தப்படும் என்று பெங்களூரு மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா ஏற்கனவே அறிவித்தார். இந்த நிலையில் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால் திட்டமிட்டபடி மேயர், துணை மேயர் மற்றும் 4 நிலைக்குழு உறுப்பினர்களின் தேர்தல் நடைபெறும் என்று மண்டல கமிஷனர் அறிவித்தார்.
அதன்படி பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கவுன்சில் கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தலை மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா முன்னின்று நடத்தினார். மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் கவுதம்குமார் (ஜோகுபாளையா வார்டு), பத்மநாபரெட்டி (காசரக்கனஹள்ளி) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சத்யநாராயணா (தத்தாத்ரேயா கோவில்) வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் பத்மநாபரெட்டி கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து களத்தில் பா.ஜனதா சார்பில் கவுதம் குமாரும், காங்கிரஸ் சார்பில் சத்யநாராயணாவும் இருந்தனர். கவுன்சிலர்கள் கைகளை உயர்த்தியும், கையெழுத்திட்டும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். அதன்படி மேயர் பதவிக்கு கவுதம்குமாருக்கு 129 ஓட்டுகளும், சத்யநாராயணாவுக்கு 112 வாக்குகளும் கிடைத்தன. பா.ஜனதா வேட்பாளரான கவுதம்குமார், 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதே போல் துணை மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராம்மோகன்ராஜ் (பொம்மனஹள்ளி) 127 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களம் கண்ட கங்கம்மா ராஜண்ணா(சக்திகணபதிநகர்) 116 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். காலை 11.30 மணிக்கு தொடங்கிய தேர்தல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தல் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, மந்திரிகள் சுரேஷ்குமார், சோமண்ணா, ஆர்.அசோக், எம்.பி.க்கள் பி.கே.ஹரிபிரசாத், பி.சி.மோகன், ராஜூகவுடா, ஹனுமந்தய்யா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் பெங்களூருவை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
மொத்தம் உள்ள 257 வாக்காளர்களில் 249 பேர் இந்த தேர்தலில் பங்கேற்றனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஜெய்ராம் ரமேஷ் எம்.பி., டி.கே.சுரேஷ் எம்.பி. உள்பட 8 பேர் வரவில்லை. தேர்தல் பணி தொடங்கிய பிறகு ஜனதா தளம்(எஸ்) கவுன்சிலர்கள் மஞ்சுளா, வாசுதேவ் ஆகியோர் தேர்தலை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர். மேயர் தேர்வானது குறித்து அறிவிக்கப்பட்ட பிறகு முன்னாள் மேயர் கங்காம்பிகே, வெள்ளி சாவியை புதிய மேயர் கவுதம்குமாரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கவுதம்குமார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வளர்ந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். ஜெயின் மதத்தை சேர்ந்த அவர் அடிப்படையில் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜனதா மேயர் பதவிக்கு பத்மநாபரெட்டி, சீனிவாஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் கவுதம்குமாரின் பெயரை பா.ஜனதா தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவுப்படி மேயர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவுதம்குமார் பெங்களூரு மாநகராட்சியின் 53-வது மேயர் ஆவார். 4 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. 43 வயதாகும் புதிய மேயர் கவுதம்குமார் பி.காம் படித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வரும் மேயர் கவுதம்குமார், 2013-14-ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி கணக்கு குழு நிலைக்குழு தலைவராக பணியாற்றினார். 47 வயதாகும் துணை மேயர் ராம்மோகன்ராஜ் சிவில் என்ஜினீயர் ஆவார்.
பெங்களூரு மாநகராட்சி மன்றத்திற்கு அடுத்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு சபை கூடியதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் எம்.எல்.சி. “கர்நாடக நகர-மாநகராட்சிகள் சட்டப்படி மேயர் பதவி காலம் முடிவடையும் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதன்படி இந்த தேர்தலை கடந்த மாதம்(செப்டம்பர்) நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கு தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்“ என்றார்.
அதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி ஹர்ஷகுப்தா, “இந்த தேர்தல் நடத்துவது குறித்த அனைத்து விவரங்களும் உங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டே தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு விவாதத்திற்கு இடமில்லை. தேர்தல் மட்டுமே நடைபெற அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அதை நீங்கள் உரிய இடத்தில் முறையிடலாம்“ என்றார்.
அப்போது மீண்டும் பேசிய ரமேஷ்குமார், “மேயர் தேர்தல் நடைபெறுவது சட்டவிரோதம். இதை ஏற்க முடியாது“ என்று கூறினார். அதற்கு முன்பு தேர்தல் அதிகாரி, 4 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது“ என்று அறிவித்தார். 8 நிலைக்குழு உறுப்பினர் தேர்தலை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story