பொள்ளாச்சியில் பரபரப்பு காந்தி சிலை முன் ‘கள்’ வைத்து போராட்டம் - கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் 56 பேர் கைது
பொள்ளாச்சியில் காந்தி சிலைமுன் ‘கள்’ வைத்து போராட்டம் நடத்திய கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் 56 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சியில் உள்ள காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பழனிசாமி தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் தாங்கள் பாட்டிலில் நிரப்பி கொண்டு வந்த கள்ளை காந்தி சிலைக்கு முன் வைத்து படையலிட்டனர். பின்னர் திடீரென்று கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார்அங்கு விரைந்து வந்தனர். அங்கு படையலிட்டிருந்த கள் பாட்டில்களை அகற்ற முயன்றனர்.
இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 2 லிட்டர் கொண்ட ஒரு பாட்டில், ½ லிட்டர் கொண்ட 5 பாட்டில்களில் இருந்த கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 56 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதானவர்களை வேனில் ஏற்றி வெங்கடேசா காலனியில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநில கொள்கைபரப்பு செயலாளர் பழனிசாமி கூறியதாவது:-
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக பொள்ளாச்சியில் காந்தி சிலை முன் கள் படையலிட்டு போராட்டம் நடத்தி இருக்கிறோம். கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும். காந்தியே புளிக்காத கள் சத்தான உணவு என்று கூறியுள்ளார். ஆனால் உடலுக்கு எந்த கெடுதலும் விளைவிக்காத கள்ளை அனுமதிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று சொல்லிக்கொண்டு, அரசே அதை விற்பனை செய்கிறது. கெடுதல் இல்லாத கள்ளை உண்பதற்கும், அதை இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் ஏன் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது தான் விவசாயிகளின் கேள்வி. பக்கத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கள்ளுக்கு தடையில்லை.
தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் டாஸ்மாக் மதுக்கடைக்கு தடை விதித்தாலும், கள்ளுக்கு தடை விதிக்கவில்லை.அதுபோன்று தமிழக அரசும் கள் இறக்க எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த தான், இந்த கள் படையல் போராட்டம் நடத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story