“இந்தி திணிப்பில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது” - நாராயணசாமி பேட்டி
இந்தி திணிப்பில் பா.ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமானம் மூலம் நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார்.
அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அபபோது கூறியதாவது:-
காந்தியடிகளின் பிறந்தநாள் விழா புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காந்தியடிகளின் வாழ்க்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. காந்தியடிகளின் கொள்கையான பூரண மதுவிலக்கை படிப்படியாகத்தான் அமல்படுத்த முடியும். புதுச்சேரியின் கலாசாரம் வேறு. தமிழகத்தின் கலாசாரம் வேறு. தமிழகத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டு இருந்தார்கள். புதுச்சேரி பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்தது. மதுவின் கொடுமை பற்றி எங்களுக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் ஒரே நேரத்தில் அதனை முடிக்க முடியாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி நடிகர் திலகம் சிவாஜிகணேசனை மிஞ்சிய சிறந்த நடிகர். அவருடைய மந்திரிசபையில் உள்ள அமித்ஷா இந்தி மொழி மட்டும்தான் இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அப்போது தமிழகம் முழுவதும் கொந்தளித்தது. அதன்பிறகு மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று அமித்ஷா கூறி இருக்கிறார். பா.ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட எந்த கொள்கையும் கிடையாது. பிரதமர் மோடி ஐ.நா.சபையில் பேசும் போது, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பேசுகிறார். தமிழகத்துக்கு வரும்போது தமிழை பாராட்டி பேசுகிறார். ஆனால், இந்தியை திணிப்பதில் பா.ஜனதா கட்சியும், அதன் தலைவர்களும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.
புதிய கல்வி கொள்கையில் இந்தி மட்டும்தான் நாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்றார்கள். போராட்டம் வெடித்தது. தற்போது மறுபரிசீலனை செய்கிறார்கள். பா.ஜனதா கட்சியின் இரட்டை வேடம் இந்த மொழியில் தெரிகிறது. இடைத்தேர்தலை பொறுத்தவரை 3 தொகுதிகளிலும் காங்கிரஸ், தி.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story