காயல்பட்டினத்தில் ரூ.18 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


காயல்பட்டினத்தில் ரூ.18 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:45 AM IST (Updated: 3 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் ரூ.18 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

ஆறுமுகநேரி, 

காயல்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் நகரசபை பொது நிதியில் இருந்து ரூ.18 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.

பின்னர் அவர், காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவில் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் ரூ.51 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நுண் உரக்குடில் மற்றும் அப்பா பள்ளி தெருவில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்டு தளகற்கள் பதிக்கப்பட்ட சாலை ஆகியவற்றின் கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நகர்ப்புற மக்களுக்கு இணையாக அனைத்து வசதிகளும் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

காயல்பட்டினத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் 20 லிட்டர் குடிநீரை ரூ.7-க்கு பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். காயல்பட்டினம் நகரசபை பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் ரூ.1 கோடியே 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், காயல்பட்டினம் நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) புஷ்பலதா, சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,

நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்வர், முன்னாள் நகர செயலாளர் காயல் மவுலானா, நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story