ஸ்ரீபெரும்புதூர் அருகே, துப்பாக்கி முனையில் டிரைவரை மிரட்டி லாரி கடத்தல் - காஞ்சீபுரத்தை சேர்ந்த 4 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி முனையில் டிரைவரை மிரட்டி லாரியை கடத்தி சென்ற காஞ்சீபுரத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு,
நாமக்கல்லை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 42). இவர், கன்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் லாரியை ஓட்டிக்கொண்டு ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்திக்கு சென்று கொண்டிருந்தார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, குடியாத்தம் வழியாக ஸ்ரீகாளஹஸ்திக்கு செல்வதற்காக குடியாத்தம் ரோட்டில் லாரியை திருப்பினார். அப்போது எதிரே வந்த கார் மீது லாரி மோதியது. இதில் கார் சேதமடைந்ததாக தெரிகிறது.
இதனால் காரில் இருந்த காஞ்சீபுரம் மணச்சூரை சேர்ந்த நாகராஜ் (37), யுவராஜ் (32), மணிகண்டன் (24), ராஜேஷ் (25), பாலச்சந்திரன் (25) ஆகிய 5 பேருக்கும், லாரி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர். பின்னர் காரில் வந்தவர்கள், காரை சரிசெய்ய லாரி டிரைவரிடம் ரூ.60 ஆயிரம் கேட்டனர். அதற்கு லாரி டிரைவர் அவ்வளவு பணம் தரமுடியாது. காரை மெக்கானிக் ஷெட்டிற்கு கொண்டு வாருங்கள் சரிசெய்து தருகிறேன் என்று கூறினார். அதற்கு காரில் வந்தவர்கள், நாங்கள் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர்கள் அங்கு தெரிந்த மெக்கானிக் ஷெட் உள்ளது அங்கு வந்து சரிசெய்து கொடுக்குமாறு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து காரில் வந்தவர்களும், லாரி டிரைவரும் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்ற போது காரில் வந்தவர்கள் திடீரென லாரியை மடக்கி அர்ஜூனனை துப்பாக்கி காட்டி மிரட்டினர். மேலும் லாரி டிரைவரை தாக்கிவிட்டு, லாரியை கடத்தி சென்றனர்.
இதுபற்றி டிரைவர் அர்ஜூனன் பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடத்தப்பட்ட லாரி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, லாரியை மீட்டனர்.
அதைத் தொடர்ந்து லாரியை கடத்தி சென்ற நாகராஜ், யுவராஜ், மணிகண்டன், ராஜேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story