பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை - கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேட்டி


பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை - கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

பணப்பட்டுவாடா நடப்பதாலேயே இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் உள்ள லைட் அவுஸ் குப்பம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பழவேற்காடு பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரசு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இதில், மீனவர்கள் வாழ்வாதார பகுதியாக விளங்கும் பழவேற்காடு பகுதியில் அதானி குழுமம் சார்பில் துறைமுகம் அமைக்கக்கூடாது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

கிராமசபை கூட்டம் முடிந்ததும் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழவேற்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததை அறிந்துகொண்டேன். இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் வசதிக்காக சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு சார்பில் கட்டிடம் கட்டிக்கொடுத்தால் போதும், நான் சிறந்த டாக்டர்களை அனுப்பிவைக்கிறேன்.

இப்பகுதி மக்கள் பயன்பெற மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதந்தோறும் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்படும். மத்திய அரசின் பல திட்டங்கள் இந்தி மொழியில் இருப்பதால் மக்களுக்கு புரிவதில்லை. அதானி குழுமம் சார்பில் இங்குள்ள துறைமுகத்தை விரிவுபடுத்தினால் 1 கோடி மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

மதுக்கொள்கையை அரசு கொள்கையாக எடுத்துக்கொள்ள கூடாது. தமிழகத்தில் மதுவை தடை செய்தால் கள்ளச்சாராயம் பெருகும் சூழ்நிலை ஏற்படும். அரசியலை வியாபாரமாக செய்து பிழைக்கலாம் என நினைப்பவர்களை கட்டுப்படுத்த முடியாது.

தேர்தலின்போது மக்களுக்கு செய்யப்படும் பண வினியோகம் மற்றும் ஊழலை தாங்க முடியவில்லை. அதனால்தான் தற்போது நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கி உள்ளோம். நாங்கள் 15 கோடி பணத்தை பார்க்கவில்லை. ஏழரை கோடி மக்களைத்தான் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story