நாகர்கோவிலில் 41 முக்கிய சந்திப்புகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் திறந்து வைத்தார்


நாகர்கோவிலில் 41 முக்கிய சந்திப்புகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 8:09 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 41 முக்கிய சந்திப்புகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே திறந்து வைத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் குற்ற சம்பவங்களில் துப்பு துலக்க கண்காணிப்பு கேமராக்கள் பெருமளவில் உதவிகரமாக இருந்து வருகின்றன. எனவே நாகர்கோவில் மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி குமரி மாவட்ட காவல்துறையும், நாகர்கோவில் மாநகராட்சியும் இணைந்து மாநகரின் 41 முக்கிய சந்திப்புகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வந்தது. நவீன முறையில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

குறிப்பாக அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், மணிமேடை சந்திப்பு, கோட்டார் சந்திப்பு, கோட்டார் பஜார், பீச்ரோடு சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு, புன்னைநகர் சந்திப்பு, கோணம், டதி பள்ளி சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, மத்தியாஸ் வார்டு சந்திப்பு, பார்வதிபுரம் சந்திப்பு என முக்கிய பகுதிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் 4–வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தெரியும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனுக்குடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா

இந்தநிலையில் 150 கண்காணிப்பு கேமராக்களுக்கான நகர கட்டுப்பாட்டு அறையின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே ரிப்பன் வெட்டி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட வன அதிகாரி ஆனந்த், கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், உதவி சூப்பிரண்டு ஜவகர், துணை சூப்பிரண்டுகள் கணேசன், சுப்புராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:–

மாவட்டம் முழுவதும்...

குமரி மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது காவல்துறையும், மாநகராட்சியும் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை அமைத்து உள்ளது. மொத்தம் 270 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதில் இப்போது 150 கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் வடசேரி, கோட்டார், நேசமணிநகர், ஆசாரிபள்ளம் ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் இவற்றை அமைத்துள்ளோம். மேலும் 120 கண்காணிப்பு கேமராக்களை பிற பகுதிகளில் அமைப்போம். இதன் மூலம் நாகர்கோவிலுக்குள் வாகனத்தில் வரும் நபர், திரும்பி செல்வது வரை போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வருவார்கள்.

சுற்றுலா நகரமான கன்னியாகுமரியிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. கடற்கரை சாலை, காந்தி மண்டபம், பஸ் நிலையம், பகவதி அம்மன் கோவில் சாலை, படகுத்துறை என கன்னியாகுமரியின் அனைத்து பகுதிகளிலும் 200 கேமராக்கள் அமைக்கப்படும். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். இதைப்போல தக்கலை, குளச்சல், கருங்கல், மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளிலும் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறைகள் அனைத்தும் அந்தந்த சப்–டிவி‌ஷன் அலுவலகங்களில் திறக்கப்படும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பிறகு முக்கிய சாலைகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

மருத்துவ முகாம்

முன்னதாக நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் போலீசாருக்கு நடந்த மருத்துவ முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இதில் கண், காது, மூக்கு, தொண்டை, குடல்நோய் போன்ற நோய்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. இதில் போலீசாரும், அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.


Next Story