தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாம் - தொழிலாளர்கள் பீதி
வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை,
கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமுடி, பன்னிமேடு, முத்துமுடி, ஹைபாரஸ்ட் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டம் பல்வேறு சிறு கூட்டங்களாக பிரிந்து நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை இடித்து தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் முக்கோட்டு முடி எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் எஸ்டேட் தோட்ட அலுவலகத்தின் சுவரை உடைத்து உள்ளிருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தின. எஸ்டேட் தொழிலாளர்கள் கூச்சலிட்டு அவைகளை விரட்டினர். ஆனால் தொடர்ந்து முத்துமுடி எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் யானைகள் முகாமிட்டு வருகின்றன.
இதனால் தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டதோடு மீண்டும் குடியிருப்புக்குள் நுழைந்து விடுமோ என்ற பீதியில் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story