4 பிள்ளைகளை பெற்ற மகராசிக்கு நேர்ந்த துயரம் கவனிக்க மனம் இல்லாமல் தெருவில் வீசப்பட்ட மூதாட்டி


4 பிள்ளைகளை பெற்ற மகராசிக்கு நேர்ந்த துயரம் கவனிக்க மனம் இல்லாமல் தெருவில் வீசப்பட்ட மூதாட்டி
x
தினத்தந்தி 4 Oct 2019 4:30 AM IST (Updated: 4 Oct 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே 4 பிள்ளைகளை பெற்ற மூதாட்டி ஒருவர், கவனிக்க மனம் இல்லாமல் தெருவில் வீசப்பட்ட சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்துள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் கம்பர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பட்டம்மாள் (வயது 95). இவர்களுக்கு ஆகிய 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி அதே கிராமத்தில் அருகருகே வசித்து வருகின்றனர். மகள்களும் குடும்பத்தினருடன் மற்றொரு கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் இனிப்பு கடை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் இறந்து விட்டதால் பட்டம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். முதுமையின் காரணமாக பட்டம்மாளுக்கு உடல்நலம் குன்றியது. இதனால், தான் பெற்ற பிள்ளைகளின் உதவியை நாடினார்.

மருமகன் வீட்டில்...

ஆனால், மகன்கள் இருவரும் அவரை வீட்டில் சேர்க்காததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் ஒருவர் வரதராஜன்பேட்டையில் உள்ள விடுதி ஒன்றில் பட்டம்மாளை சேர்த்தார். அங்கிருந்த பட்டம்மாளை, சின்ன மருமகன் வடலூரில் உள்ள சபை விடுதி ஒன்றில் சேர்த்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என்று ஆவலில் மீண்டும் சொந்த கிராமத்துக்கு பட்டம்மாள் வந்தார்.

அப்போதும் 2 மகன்களும் அவரை ஏற்காததால், ஒரு மகள் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது மருமகன், பட்டம்மாளை தனது தாய்போல கவனித்து வந்துள்ளார். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவி, மாமியார் இருவரையும் ஒருசேர கவனிக்க முடியவில்லை.

தெருவில் வீசிய மகன்கள்

இதனால் அவர், மாமியார் பட்டம்மாளை மகன்களிடம் விட்டு, விட்டு வந்து விடலாம் என்று எண்ணி நேற்று முன்தினம் இரவு கிராமத்துக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், பெற்ற தாயை மகன்கள் இருவரும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால், பட்டம்மாளை அங்கேயே விட்டு விட்டு அவரது மருமகன் சொந்த ஊருக்கு திரும்பி போய் விட்டார்.

இந்நிலையில், மகன்கள் இருவரும் பெற்ற தாய் என்றும் பாராமல் பட்டம்மாளை தூக்கி வந்து தெருவில் போட்டனர். இதனால், பட்டம்மாள் கொசுக்கடியிலும், பனியிலும் கிடந்தார். இதனால், அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

இதனைக்கண்ட அக்கிராம மக்கள் ஒன்று கூடி, மகன்கள் இருவரையும் அழைத்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பெற்ற தாயை வீட்டில் வைத்து கவனிக்குமாறு கூறினர். ஆனாலும் அவர்கள் தாயை தங்களது வீட்டில் சேர்க்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், 108 ஆம்புலன்சை வரவழைத்து அதில் பட்டம்மாளை ஏற்றி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை சக நோயாளிகளின் உறவினர்கள் கவனித்து வருகிறார்கள். இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு“ என்று ஒரு திரைப்பட பாடல் வரி உண்டு. அந்த பாடல் வரிக்கு ஏற்ப பட்டம்மாளின் வாழ்க்கையும் அமைந்து விட்டதே என்று கிராம மக்கள் வேதனைப்படுகின்றனர். 4 பிள்ளைகளை பெற்றும் அவரை கடைசி காலத்தில் வைத்து கவனிக்க மனம் இல்லாமல் தெருவில் தூக்கி வீசிய சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்துள்ளது.

Next Story