தர்மபுரி நகரில் சிறப்பு குழுவினர் ஆய்வு: டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட சினிமா தியேட்டர்களுக்கு அபராதம்


தர்மபுரி நகரில் சிறப்பு குழுவினர் ஆய்வு: டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட சினிமா தியேட்டர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 4 Oct 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் ஆய்வு நடத்திய சிறப்பு குழுவினர் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட 2 சினிமா தியேட்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். சுகாதாரமற்ற முறையில் இருந்த திருமண மண்டபத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 11 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த டெங்குகாய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ அலுவலர் யோகாநந்த் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் தர்மபுரி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையிலான சுகாதார குழுவினர் தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

தர்மபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள 2 சினிமா தியேட்டர்கள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு திருமணமண்டபம் ஆகியவற்றில் இந்த குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அந்த 2 தியேட்டர்களிலும் சுகாதார குறைபாடு இருப்பதும், அந்த வளாகத்தில் உள்ள தண்ணீர்தொட்டிகள், பழைய டயர்கள், பெயிண்டு டப்பாக்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த 2 தியேட்டர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சுகாதார குறைபாடு இருந்த திருமண மண்டபத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 24 மணிநேரத்தில் திருமண மண்டபத்தை தூய்மைப்படுத்தி பராமரிக்க உத்தரவிடப்பட்டது.

இதுதொடர்பாக தர்மபுரி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:- தர்மபுரி நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க கலெக்டர் மலர்விழி உத்தரவின்படி டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. டெங்கு கொசுக்கள் பரவுவதை தடுக்க வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வீடு, வீடாக சென்று டெங்கு கொசுக்களை கண்டறியும் பணியில் களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். டெங்கு கொசுக்களை ஒழிக்க பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கடைகள், திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வீடுகள், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தண்ணீரை தேக்கி டெங்குகொசு வளர ஏதுவான சூழலை ஏற்படுத்துபவர்கள் மீது தமிழ்நாடு பொதுசுகாதார சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story