உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகம் இருக்கின்றனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று வெளியிட்டார். அதை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி பெற்றுக் கொண்டார்.
தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள், 22 பேரூராட்சிகள், 6 நகராட்சிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் 870 வாக்குச்சாவடிகள், பேரூராட்சிகளில் 362 வாக்குச்சாவடிகள், நகராட்சிகளில் 345 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,577 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 68 ஆயிரத்து 603 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 446 ஆண்கள், 5 லட்சத்து 41 ஆயிரத்து 992 பெண்கள், 165 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள். இந்த பட்டியலின்படி ஆண்களை விட 15 ஆயிரத்து 546 பெண்கள் அதிகம் உள்ளனர். இந்த பட்டியலின்படி, ஒன்றிய பகுதிகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 448 வாக்காளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 866 வாக்காளர்களும், நகராட்சி பகுதிகளில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 289 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியலை அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம்.
Related Tags :
Next Story