கந்திலியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க.வினர் போராட்டம்
கந்திலியில் தேர்தல் அலுவலர் வராததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 2 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் தலைவர், இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனையொட்டி மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் 31 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று மாலை 5 மணிக்கு வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் அலுவலர் அறிவித்திருந்தார். அதன்படி காலை 10 மணி முதல் அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்து காத்திருந்தனர். மாலை 5 மணி வரை தேர்தல் அலுவலர் வரவில்லை என்பதால் தி.மு.க. சார்பில் தேர்தல் அலுவலரை அ.தி.மு.க.வினர் கடத்தி விட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.
பின்னர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் திடீரென சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க., தி.மு.க.வினர் கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கே.எஸ்.சாமிகண்ணு, துணைத்தலைவர் பூபதி பெயர் பலகையில் இருந்த அறிவிப்பு நோட்டீசை கிழித்து எறிந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதையடுத்து ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், வேட்புமனு பரிசீலனை என்று கூறி காலை முதல் தேர்தல் நடத்தும் அலுவலருக்காக காத்திருந்தோம். 5 மணி ஆகியும் தேர்தல் நடத்தும் அலுவலர் வரவில்லை. அமைதியாக நடைபெற்று கொண்டிருந்த வேட்புமனு பரிசீலனை வேண்டுமென்றே சட்டம், ஒழுங்கு பிரச்சினை என்று கூறி தேர்தல் ஒத்திவைப்பு என்ற நோட்டீஸ் ஒட்டி சென்று உள்ளார்கள். தேர்தல் ஆணையத்தை மீறி செயல்பட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து தி.மு.க.வினர் வங்கியை மூட விடாமல் வாசலில் அமர்ந்தும், உள்ளே அமர்ந்தும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story