திருவண்ணாமலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


திருவண்ணாமலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 89 ஆயிரத்து 432 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 457 பேரும், பெண்கள் 10 லட்சத்து 9 ஆயிரத்து 880 பேரும், இதர வாக்காளர்கள் 95 பேர் என மொத்தம் 19 லட்சத்து 89 ஆயிரத்து 432 பேர் உள்ளனர்.

இதில் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகளில் ஆண்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 519, பெண்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 934, இதர வாக்காளர்கள் 14 என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 467 பேர் உள்ளனர்.

பேரூராட்சிகளில் ஆண்கள் 56 ஆயிரத்து 711 பேரும், பெண்கள் 61 ஆயிரத்து 50 பேரும், இதர வாக்காளர்கள் 3 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 764 பேர் உள்ளனர். ஊராட்சிகளில் ஆண்கள் 8 லட்சத்து 5 ஆயிரத்து 227 பேரும், பெண்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 896 பேரும், இதர வாக்காளர்கள் 78 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 27 ஆயிரத்து 201 பேர் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சிகளில் 257, பேரூராட்சிகளில் 164, ஊராட்சிகளில் 3,520 ஆக மொத்தம் 3,941 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 123 நகராட்சி வார்டுகள், 150 பேரூராட்சி வார்டுகள், 34 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 341 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 6,207 கிராம ஊராட்சி வார்டுகள், 860 கிராம ஊராட்சிகள், 4267 குக்கிராமங்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 2,100 வாக்குப்பதிவு கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் 2,135 கருவிகள் இருப்பு உள்ளது. 1,200 கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,230 கருவிகள் இருப்பு உள்ளது.

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.பழனி முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் க.பா.மகாதேவன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்பாபு, அருள்செல்வம், தேர்தல் பிரிவு உதவியாளர் வடிவேலு, உதவியாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஒன்றியத்தை சேர்ந்த 45 ஊராட்சிகளிலும் அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.

ஆரணி நகராட்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அலுவலக மேலாளர் நெடுமாறன், தேர்தல் உதவி அலுவலர் குமார், வருவாய் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகளில் மொத்த ஆண் வாக்காளர்கள் 24,871, பெண் வாக்காளர்கள் 27,013, மொத்தம் 51,884 இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Next Story