இறப்பிலும் இணை பிரியாத தம்பதி மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் சாவு


இறப்பிலும் இணை பிரியாத தம்பதி மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் சாவு
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 6 Oct 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்தார்.

திருச்சி,

கணவன்-மனைவி என்பது ஒரு புனிதமான உறவு. கடந்த காலங்களில் கணவன்-மனைவி உறவில் விரிசல் என்பது மிகக்குறைந்தே காணப்பட்டது. இல்லத்தில் சிற்சில சண்டைகள் இருந்தாலும் கூட சிறிது நேரத்தில் சண்டையை மறந்து அவர்கள் சமாதானம் அடைந்து விடுவார்கள்.

ஆனால் சமீப காலங்களில் கணவன்-மனைவிக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு அது விவகரத்தில் முடிவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவையெல்லாவற்றையும் கடந்து தள்ளாடும் வயதில் இணைபிரியால் வாழ்ந்த தம்பதியினர் இறப்பிலும் இணைபிரியாமல் உயிரிழந்தது அந்த கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

இணை பிரியா தம்பதி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்காநாயக்கர் (வயது 85). விவசாயி. இவரது மனைவி பெருமாயி அம்மாள்(75). ஆரம்ப காலம் முதலே கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக, இணைபிரியாமல் வாழ்கையை வாழ்ந்து வந்தனர். சமீப காலமாக பெருமாயி அம்மாள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் அவரை ரெங்காநாயக்கரும், குடும்பத்தினரும் கவனித்து வந்தனர்.

மரணம்

இந்தநிலையில் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை பெருமாயி அம்மாள் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். தனது மனைவி உயிரிழந்த தகவலை கேட்ட ரெங்காநாயக்கரும் கண்கலங்கினார். சோகத்தில் இருந்த அவருடைய உயிரும் சுமார் ஒரு மணி நேரத்தில் பிரிந்தது.

மனைவியின் இறப்பை தாங்க முடியாமல் ரெங்கா நாயக்கரும் உயிரிழந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் அங்கு திரண்டனர். இதையடுத்து இருவரின் உடல்களும் அருகருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சோகம்

பின்னர் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து இறந்த தம்பதியினரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வயதான காலத்திலும் கூட இணைபிரியாமல் இறந்த தம்பதியின் இழப்பு அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story