வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் 421 பேருக்கு ரூ.28¼ கோடி கடனுதவி கலெக்டர் வழங்கினார்


வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் 421 பேருக்கு ரூ.28¼ கோடி கடனுதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Oct 2019 10:45 PM GMT (Updated: 5 Oct 2019 7:12 PM GMT)

வங்கி வாடிக்கையாளர்சந்திப்பு முகாமில் 421 பேருக்கு ரூ.28¼ கோடி கடனுதவியை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிற வங்கிகளான ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுடன் இணைந்து நடத்திய வாடிக்கையாளர்சந்திப்பு முகாம் தஞ்சையில் நடந்தது. முகாமை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய நிதித்துறை சார்பில் வாடிக்கையாளர்களிடம் வங்கி சேவையை எளிதாக கொண்டு செல்லும் நோக்கில் இந்தியா முழுவதும் 400 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் முதல்கட்டமாக 250 மாவட்டங்களில் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வங்கி சேவைகளையும் பொதுமக்களிடம் எளிதாக கொண்டு செல்வதே இந்த முகாமின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கடனுதவி

பின்னர் 421 பயனாளிகளுக்கு ரூ.28 கோடியே 30 லட்சம் மதிப்பிலான கடனுதவியை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். இதில் ரூ.7 கோடியே 21 லட்சம் விவசாய கடனாகவும், ரூ.9 கோடியே 4 லட்சம் தனிநபர் கடனாகவும், ரூ.12 கோடியே 13 லட்சம் சிறுதொழில் கடனாகவும் வழங்கப்பட்டது. இவற்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 246 பேருக்கு ரூ.17 கோடியே 38 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுமேலாளர் பி.ஏ.ஆர்.பேட்ரோ, மண்டல முதன்மை மேலாளர் லட்சுமிநரசிம்மன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயகுமார், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன் உள்பட அனைத்து வங்கிகளின் முதன்மை அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

2-ம் கட்டம்

முன்னதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுமேலாளர் பி.ஏ.ஆர்.பேட்ரோ நிருபர்களிடம் கூறும்போது, வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் முதல்கட்டமாக 250 இடங்களில் நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. 2-ம் கட்டமாக 150 இடங்களில் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தி வரை நடக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, கரூர், சென்னை, ஆந்திரா மாநிலம் வாரங்கால் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது என்றார்.

Next Story