ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி தாறுமாறாக ஓடிய பஸ்சை கட்டுப்படுத்திய துணிச்சல் வாலிபர்


ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி தாறுமாறாக ஓடிய பஸ்சை கட்டுப்படுத்திய துணிச்சல் வாலிபர்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:45 AM IST (Updated: 6 Oct 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரி அருகே ஓடும் மாநகர பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்தார். தாறுமாறாக ஓடிய பஸ்சை வாலிபர் ஒருவர் துணிச்சலாக கட்டுப்படுத்தினார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சிறுச்சேரியில் இருந்து கோயம்பேட்டிற்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. பஸ்சை தேனியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (வயது 36) என்பவர் ஒட்டி வந்தார். வெங்கடேசன் (52) என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 15-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். பஸ்சை வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் அருகே ஓட்டி வந்தபோது, டிரைவர் ராஜேஷ்கண்ணாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பஸ்சின் ‘ஸ்டியரிங்கி’ல் மயங்கி விழுந்தார். இதனால் பஸ் கட்டுபாட்டை இழந்து சிக்னலுக்காக நின்றிருந்த கார்கள் மீது மோதி கொண்டு சென்றது.

உடனே இதைக்கண்ட சாலையோரம் நின்றிருந்த மதுரவாயலை சேர்ந்த கார் டிரைவர் விஜய் (25) என்பவர், உடனே ஓடும் பஸ்சில் துணிச்சலாக ஏறி நிலைதடுமாறிய பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அதன் பின்னர் பயணிகளின் உதவியுடன், மயங்கி கிடந்த பஸ் டிரைவர் ராஜேஷ்கண்ணாவை மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு சென்றனர். ஆனால் அவரை சோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் பஸ் பயணிகள் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story