குன்னம் அருகே தனியார் கல்லூரி பஸ்களை சேதப்படுத்திய வழக்கில் 10 பேர் கைது


குன்னம் அருகே தனியார் கல்லூரி பஸ்களை சேதப்படுத்திய வழக்கில் 10 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2019 3:45 AM IST (Updated: 6 Oct 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே தனியார் கல்லூரி பஸ்களை சேதப்படுத்திய வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தில் நேற்று முன்தினம் காலை ஒரு தனியார் கல்லூரி பஸ்கள் முந்திச்செல்லும்போது விபத்து ஏற்பட்டது. இதில் குன்னம் அரசு பள்ளி மாணவிகள் 7 பேர் காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தும், டயர்களை பஞ்சராக்கியும், பஸ்களை பள்ளத்தில் தள்ளி விட்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் அடைந்தது. இது குறித்து தனியார் கல்லூரி பஸ் மேலாளர் முரளி கொடுத்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை தேடி வந்தனர்.

10 பேர் கைது

இந்நிலையில் பெரியவெண்மணி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 27), அந்துர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா(25), சித்தளி பகுதியை சேர்ந்த ராஜா(31), குமார்(45), சேகர்(61), வெங்கடேசன்(39), கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் செல்வம்(19), பிரகாஷ்(17), சுபாஷ்(19), அன்புராஜ்(28) ஆகிய 10 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேர் உள்பட பலரை மருவத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story