நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
நெல்லை,
நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் நடத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் மொத்தம் 1,716 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் தலைமை தாங்கினார். பொது தேர்தல் பார்வையாளர் விஜயசுனிதா, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல்அமீது, தாசில்தார் விமலாராணி ஆகியோர் கலந்து கொண்டு வாக்குப்பதிவு எந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று செய்முறை விளக்கம் அளித்து பயிற்சி அளித்தனர். மேலும் வாக்குச்சாவடியில் எப்படி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? என்ற விவரத்தையும் விளக்கி கூறினார்கள்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பயிற்சி உதவி கலெக்டர்கள் சிவகுரு பிரபாகரன், அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் ஷில்பா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர் அஜய்குமார்சிங் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசும் போது கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 36 பறக்கும் படை குழுக்களும், நிலையான கண்காணிப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சிறப்பாக பணிபுரிந்திட ஏதுவாக பயிற்சி வகுப்புகள் தேர்தல் செலவினம் மற்றும் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்று உள்ளது.
பறக்கும் படைக்குழு அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்கள் தங்களது பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். பிரசார வாகனத்தில் கட்சியின் கொடி கட்டியிருந்தால் அந்த வாகனத்தின் மீது புகார் பதிவு செய்ய வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனம், அரசு வாகனம் போன்ற அனைத்து விதமான வாகனங்களையும் சோதனை செய்யவேண்டும். தனிநபர், மதம், சமுதாயம் குறித்து விமர்சனம் செய்பவர்கள் மீது உடனடியாக புகார் பதிவு செய்ய வேண்டும். பிரசார பணிகளில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளை ஈடுபடுத்துபவர்கள் மீது புகார் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story