வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது - பிரதான மதகுகளில் தண்ணீர் கசிவு
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியதுடன், பிரதான மதகுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்த காரணத்தினாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது.
இதன்காரணமாக இந்த ஆண்டில் முதல்முறையாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியது. வைகை அணை நீர்மட்டம் 60.14 அடியாக உயர்ந்துள்ளதால் அணையின் பிரதான மதகுகளில் தண்ணீர் கசிய தொடங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணை இந்த ஆண்டு முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டும்போது வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் எச்சரிக்கையும், 68.50 அடியை எட்டும் போது 2-வது எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் 3-வது எச்சரிக்கையும் விடுக்கப்படும். அத்துடன் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படும். வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 60.14 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,367 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 660 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 3,627 மில்லியன் கன அடியாக உள்ளது.
Related Tags :
Next Story