மொபட் மீது தனியார் பஸ் மோதல்: கணவன், மனைவி பரிதாப சாவு - பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
திருச்செங்கோடு அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு அருகே உள்ள நெய்க்காரப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (43). இவர்களின் பேத்தி காவிய தர்ஷினி (5). இவர்கள் 3 பேரும் ஒரு மொபட்டில் நேற்று இரவு 8 மணியளவில் அதே பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த முத்துசாமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். காவிய தர்ஷினினுக்கும் காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காயமடைந்த முத்துசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். காவிய தர்ஷினிக்கு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென திருச்செங்கோடு-சேலம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியலால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதி வழியாக செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதில் பலர் உயிரிழப்பதுடன், காயம் அடைந்து வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேகத்தடை அமைப்பதுடன், தற்போது விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதைகேட்ட போலீசார், அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்பு போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு அருகே விபத்தில் கணவன், மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story