கோத்தகிரி அருகே, நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் காரில் வந்த கும்பல் - போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட்டம்


கோத்தகிரி அருகே, நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் காரில் வந்த கும்பல் - போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 6 Oct 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் காரில் வந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வெடி சத்தம் கேட்டது. உடனே கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கிருந்து கார் ஒன்று வேகமாக புறப்பட்டு சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த நேரத்தில் இடுக்கொரை கிராமத்துக்கு வரும் அரசு பஸ்சில் பயணிக்கும் தங்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள அரசு பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினர். அதன்படி டிரைவர் பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தினார். அப்போது அங்கு அந்த கார் வந்தது. பின்னர் காரில் இருந்த 4 பேர் கீழே இறங்கி, ‘ஏன் பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தி இருக்கீங்க‘ என்று கேட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் இருந்த இடுக்கொரை கிராம மக்கள் கீழே இறங்கி, காரில் வந்தவர்களிடம் வெடி சத்தம் கேட்டது குறித்து விசாரித்தனர்.

உடனே அவர்கள் காரில் ஏறி, வந்த வழியாக திரும்பி செல்ல முயன்றனர். ஆனால் இடுக்கொரை கிராம மக்கள் காரை அங்கிருந்து எடுக்க விடவில்லை. அப்போது போலீசாரின் வாகனம் அங்கு வந்தது. இதை பார்த்ததும் காரை விட்டு அவர்கள் கீழே இறங்கி, அருகிலுள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். பின்னர் போலீசார் காரில் சோதனையிட்டனர். அப்போது 3 நாட்டு வெடிகுண்டுகள், 2 அரிவாள்கள், டார்ச் லைட் ஆகியன இருந்தன. உடனே அவைகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அவர்கள் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வந்த கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம். கார் நம்பரை வைத்து, அதன் உரிமையாளர் விவரத்தை சேகரித்து உள்ளோம். தப்பி ஓடிய கும்பல் விரைவில் பிடிபடும் என்றனர்.

Next Story