கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டம்
கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர், இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று கூறி தி.மு.க.வினர் தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனையடுத்து அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாலை 5 மணி வரை வேட்புமனு பரிசீலனை செய்யும் அலுவலர் சண்முகம் அலுவலகத்திற்கு வரவில்லை.
இந்த நிலையில் திடீரென அறிவிப்பு பலகையில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் பரிசீலனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன் ஆகியோர் தலைமையில், தி.மு.க.வினர் வங்கி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தல் அலுவலரை காணவில்லை என கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நேற்று 2-வது நாளாக தேர்தல் அலுவலர் வராததை கண்டித்து தொடர்ந்து வங்கி முன்பு அமர்ந்து போராட்டம் செய்தனர். மேலும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து, பந்தல் போட்டு அமர்ந்திருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கந்திலி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளிப்பதாக கூறி நடந்து சென்றனர்.
கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நல்லதம்பி எம்.எல்.ஏ. ஏற்கனவே புகார் அளித்ததற்கான ரசீது (சி.எஸ்.ஆர்.) வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து போலீசார் சி.எஸ்.ஆர். வழங்கினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் நல்லதம்பி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ‘இன்று (நேற்று) 2-வது நாளாக போராட்டம் நடத்தினோம். பண்டிகை காலம் என்பதால் போராட்டத்தை கைவிட்டு விட்டோம். தேர்தல் அதிகாரி புதன்கிழமை வரவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.
Related Tags :
Next Story