சென்னை விமான நிலையத்தில் ரூ.24½ லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.24½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Oct 2019 10:00 PM GMT (Updated: 6 Oct 2019 6:37 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது யூசுப் (வயது 29) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் 5 கையடக்க ரேடியோக்கள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 235 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த கமலா(52) என்பவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் இருந்து ரூ.24 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள 620 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story