நாமக்கல்லில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்


நாமக்கல்லில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:00 PM GMT (Updated: 6 Oct 2019 9:14 PM GMT)

நாமக்கல்லில் நேற்று ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

நாமக்கல்,

ஆயுதபூஜை பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல்லில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி நேற்று முழுவீச்சில் நடைபெற்றது. மேலும் பூஜையில் இடம் பெறும் பொரி, கடலை, வெல்லம் போன்ற பொருட்கள் விற்பனை மும்முரமாக இருந்தது. இதற்காக சாலை ஓரங்களில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் போடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இந்த கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக நாமக்கல் மெயின்ரோடு, திருச்சி ரோடு, சேலம் ரோடு, உழவர்சந்தை பகுதிகளில் அதிக அளவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆயுதபூஜையை முன்னிட்டு லாரி பட்டறைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அலங்காரம் செய்ய தேவையான அலங்கார பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

பூசணிக்காய் விற்பனை

இதேபோல் ஆயுதபூஜை நாளில் பூஜைகளை முடித்து கொண்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். எனவே பூசணிக்காயும் அதிக அளவில் சாலை ஓரங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன. இவற்றை திருச்சி, ஆத்தூர் பகுதிகளில் இருந்து வாங்கி வந்து, வியாபாரிகள் விற்பனைக்கு வைத்து இருந்தனர்.

இவை அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.20 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டன. இவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. 

Next Story