சிவகங்கை பகுதியில் மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி
சிவகங்கை பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள்.
சிவகங்கை,
சிவகங்கை பகுதியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது. அப்போது காளவாசல் பகுதியில் ஒருவரது வீட்டில் கட்டிட வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு மதுரை முக்கு பகுதியை சேர்ந்த சவரிமுத்துராஜன் (வயது 30) என்பவர் கட்டுமான வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி இறந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
சிவகங்கையை அடுத்த கோவானூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி (51). இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று தனது ஆடுகளை வயல் வெளியில் மேய்ச்சலுக்கு விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரை மின்னல் தாக்கியது.
அதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மின்னல் தாக்கி இறந்த சவரிமுத்துராஜன், மலைச்சாமி ஆகியோரது குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்தை கலெக்டர் ஜெயகாந்தன் நேரடியாக சென்று வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதிபன், கோட்டாட்சியர் செல்வகுமாரி, தாசில்தார் கண்ணன் உள்பட அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
Related Tags :
Next Story