சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்: தொழிலாளி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்: தொழிலாளி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 6 Oct 2019 10:45 PM GMT (Updated: 6 Oct 2019 9:40 PM GMT)

தேனி அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில், அவருடைய உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடந்தது.

தேனி, 

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 75). கூலித்தொழிலாளி. கடந்த மாதம் 11-ந்தேதி இவர் இறந்தார். அவருடைய உடல், பழனிசெட்டிபட்டியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜாங்கம் மகன் தீபக் (22) என்பவர் ராஜாராம் சாவில் சந்தேகம் இருப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

அதில் தனது கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த மாதம் 5-ந்தேதி இரவில் பதிவான காட்சியில், ராஜாராமை ஒருவர் தனது கடையின் முன்பு தாக்கும் காட்சி பதிவாகி இருந்ததாக கூறியிருந்தார். இதையடுத்து போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், ராஜாராம் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி பழனிசெட்டிபட்டி மயானத்தில் தாசில்தார் தேவதாஸ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ராஜாராம் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் மயானத்திலேயே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் அருண்குமார் தலைமையில் குழுவினர், ராஜாராம் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனை சுமார் 1 மணி நேரம் நடந்தது. இதுகுறித்து டாக்டர் அருண்குமாரிடம் கேட்டபோது, ராஜாராம் உடல் பாகங்களை ஆய்வு செய்வதற்கு மதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மதுரையில் இருந்து பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அவருடைய மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். ராஜாராம் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது, அப்பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் மயானத்தில் கூடி நின்று பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story