பொள்ளாச்சியில் சிறுவன் சாவில் திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அடித்துக்கொன்றது அம்பலம் - வாலிபர் கைது
பொள்ளாச்சியில் சிறுவனை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பொள்ளாச்சி,
காஞ்சீபுரம் மாவட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 22). இவர்களுக்கு அழகுவேல் (5), மதியழகன் (3) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர்.
இதைத்தொடர்ந்து பேச்சியம்மாள், தர்மபுரியைச் சேர்ந்த ஜெயமணி என்ற பெண்ணுடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் பேச்சியம்மாளுக்கு, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தை சேர்ந்த உறவினர் பிரகாஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்லூருக்கு வந்த பிரகாஷ், பேச்சியம்மாளுடன் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் சிறுவன் மதியழகன் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனின் தாய் பேச்சியம்மாள், பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சிறுவனின் முகம் உள்பட உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அங்கிருந்து பிரகாஷ் தப்பியோடி தலைமறைவானார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் தாய் பேச்சியம்மாள் மற்றும் ஜெயமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிரகாஷ்தான், சிறுவன் மதியழகனை அடித்துக்கொன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரகாசை தேடி வந்தனர். இந்தநிலையில் கோவை குஞ்சிபாளையம் டாஸ்மாக் கடை அருகே வைத்து பிரகாசை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், பேச்சியம்மாளுக்கும், எனக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலுக்கு பேச்சியம்மாளின் மகன் மதியழகன் இடையூறாக இருந்தான். இதனால்தான் சிறுவனை அடித்துக்கொன்றதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story