வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அண்ணா காலனியை சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் அந்தோணி முத்து (வயது 20). லிப்ட் கிளீனரான இவர் நேற்று முன்தினம் இரவில் புதிய துறைமுகம் நிலக்கரி குடோன் பகுதியில் போர்ட் லிப்ட் எந்திரத்தை துடைத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு பின்நோக்கி வந்த லாரி, எதிர்பாராத விதமாக அந்தோணி முத்து மீது மோதியது. இதில் அந்தோணி முத்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தெர்மல்நகர் போலீசார், லாரியை ஓட்டி வந்த மேல்மாந்தை பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் முருகனை (40) கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி தெற்கு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞானஜேக்கப் (49). இவர் மடத்தூர் பைபாஸ் ரோட்டில் ஜெராக்ஸ் கடை வைத்து உள்ளார். இவர் கடந்த 6–ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் முருகேசன்நகரில் இருந்து மடத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியில் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஞானஜேக்கப் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சேலம் தளவாய்புரத்தை சேர்ந்த செல்வமுத்துகுமாரசாமி என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story