விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 9 Oct 2019 4:15 AM IST (Updated: 8 Oct 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி பள்ளிகளில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

திருச்சி,

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது.

அதன்படி, திருச்சியில் உள்ள பல பள்ளிகளில் விஜயதசமி தினமான நேற்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பல தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தனர். அப்போது ஆசிரியர்கள் அரிசியில் தமிழில் முதல் எழுத்தான ‘அ’ என கையை பிடித்து எழுத வைத்து மாணவர்களை சேர்த்துக்கொண்டனர். இதற்காக விடுமுறை நாள் என்றாலும் நேற்று பல பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன.

மாநகராட்சி பள்ளி

திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று எல்.கே.ஜி. வகுப்பில் 3 குழந்தைகளும், யூ. கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் தலா ஒரு குழந்தையும் சேர்க்கப்பட்டனர். திருச்சி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் முதல் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டது என்ற பெருமையுடைய இப்பள்ளியில் தற்போது 489 மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். விஜயதசமி திருநாளில் வித்யாரம்பம் எழுதி 3 குழந்தைகள் சேர்ந்து இருப்பதுடன் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு மாணவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி கூறினார்.

உத்தமர் கோவில்

இதுபோல் நெ.1டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் நேற்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. முன்னதாக காலை 8 மணிக்கு உற்சவர் சரஸ்வதிக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மகா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பெற்றோர் தங்களது குழந்தைகளின் கை விரலை பிடித்து, வாழை இலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்லின் மேல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ' என்ற எழுத்தை எழுதி குழந்தைகளுக்கு எழுத பழகி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வந்து கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் பெ.ஜெய்கி‌‌ஷன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story