பெங்களூரு அருகே பயங்கரம்; கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபர் சுட்டுக்கொலை


பெங்களூரு அருகே பயங்கரம்; கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 8 Oct 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஸ்ரீராம்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). திருமணம் ஆனவர். இந்த நிலையில் ரமேசின் மனைவிக்கும், முனியப்பா (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் 2 பேருக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த ரமேஷ் தனது மனைவி மற்றும் முனியப்பா ஆகியோரை கண்டித்தார். மேலும் கள்ளத்தொடர்பை கைவிடும்படி வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ரமேசுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் முனியப்பாவை பார்க்கும்போது ரமேஷ் அவரை திட்டி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம்புரத்தில் வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் முனியப்பா, ரமேஷ் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முனியப்பா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரமேசை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்ததால் ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து முனியப்பா அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்தவுடன் ஜிகினி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் ஜிகினி போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியப்பாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story