ஆரேகாலனியில் 2 ஆயிரத்து 141 மரங்களை வெட்டிவிட்டோம் - மெட்ரோ ரெயில் கழகம் தகவல்


ஆரேகாலனியில் 2 ஆயிரத்து 141 மரங்களை வெட்டிவிட்டோம் - மெட்ரோ ரெயில் கழகம் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2019 5:00 AM IST (Updated: 9 Oct 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஆரேகாலனியில் 2 ஆயிரத்து 141 மரங்களை வெட்டிவிட்டோம் என மெட்ரோ ரெயில் கழகம் கூறியுள்ளது.

மும்பை,

மும்பை ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக சுமார் 2 ஆயிரத்து 700 மரங்கள் வெட்டப்பட இருந்தது. இதற்கு மும்பை மாநகராட்சியும் ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து இரவோடு இரவாக ஆரேகாலனியில் மரங்களை வெட்டும் பணியை மும்பை மெட்ரோ ரெயில் கழகம் தொடங்கியது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரேகாலனியில் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து மும்பை மெட்ரோ ரெயில் கழகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். இனிமேல் மரங்களை வெட்டும் பணி நடக்காது. ஆனால் ஏற்கனவே வெட்டிய மரங்களை அகற்றும் பணி நடைபெறும். ஆரேகாலனியில் மரங்களை வெட்ட மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் 2 ஆயிரத்து 141 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்கள் அங்கு இருந்து அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கும். இதுவரை மெட்ரோ கழகம் 23 ஆயிரத்து 846 மரக்கன்றுகளை நட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று முதல் ஆரேகாலனியில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

இதுகுறித்து மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரனாய் அசோக் கூறுகையில், ‘‘ஆரேகாலனியில் விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது அங்கு இயல்பான நிலையே உள்ளது’’ என்றார்.

அந்த பகுதியை சேர்ந்த ஷியாம் போயர் கூறுகையில், ‘‘தற்போது ஆரேகாலனி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. பொது மக்கள் சாதாரணமாக நடமாட முடிகிறது. ஆனால் மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடத்தில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Next Story