காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்; தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார்


காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்; தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார்
x
தினத்தந்தி 9 Oct 2019 3:30 AM IST (Updated: 9 Oct 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார் அளித்தனர்.

புதுச்சேரி,

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங்கை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். அப்போது புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. அரசு கட்டிடமான கம்பன் கலையரங்கத்தில் கருத்தரங்கம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி உள்ளனர். அந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பிரதமர், மத்திய மந்திரிகள், புதுவை எதிர்க்கட்சி தலைவர் குறித்து மரியாதை குறைவாக பேசி உள்ளனர். அந்த கூட்டத்தை தேர்தல் பிரசார கூட்டம்போல் நடத்தி உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story