பட்டாசு வியாபாரிகளை ஏமாற்றும் புரோக்கர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிவகாசி பகுதியில் உள்ள மொத்த விற்பனைநிலையங்களுக்கு பட்டாசு வாங்க வரும் வெளியூர் வியாபாரிகளிடம் பொய்யான வாக்குறுதி தரும் புரோக்கர்களால் பட்டாசு விற்பனை குறைந்துள்ளதாகவும், ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகாசி,
தீபாவளிக்கான பட்டாசு தயாரிப்பு சிவகாசி பகுதி ஆலைகளில் மும்முரமாக நடந்து வருகிறது. தொலைதூரம் உள்ள மாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தங்களுக்கு தேவையான பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுக்க ஆகஸ்டு மாதத்தில் வெளி மாநில வியாபாரிகள் வருவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி தாமதமாக தொடங்கப்பட்டதால் பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டதால் பல மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஜூன், ஜூலை மாதங்களிலேயே சிவகாசிக்கு வந்து பட்டாசு ஆலையில் ஆர்டர் கொடுத்து விட்டு சென்றனர். இதனால் தற்போது சில மாநிலங்களில் இருந்து மட்டும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.
இதுபோன்ற வியாபாரிகள் சிவகாசிக்கு வரும் போது அவர்களை சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகிகள் அழைத்துச் சென்று தங்கள் நிறுவன தயாரிப்புகளை செயல்முறை விளக்கம் அளித்து பின்னர் ஆர்டர் எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது பட்டாசு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதால் பெரிய நிறுவனங்கள் பல தங்களது வழக்கமான வாடிக்கையாளர்களை மட்டும் அழைத்து அவர்களுக்கு வேண்டிய பட்டாசுகளுக்கு ஆர்டர் எடுத்து வருகிறார்கள். புதிய வியாபாரிகள் பலர் எந்த நிறுவனத்தின் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுப்பது என்று தெரியாமல் திணறி வரும் நிலையில் சிவகாசி பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுற்றி திரியும் புரோக்கர்கள் வெளியூர் வியாபாரிகளை குறி வைத்து தற்போது மோசடி செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறைந்த விலைக்கு பட்டாசுகளை வாங்கித் தருவதாகவும், அதிக தள்ளுபடி வாங்கித் தருவதாகவும் பொய்யான வாக்குறுதிகளை அந்தவியாபாரிகளிடம் கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு அந்த தொகைக்கு உங்கள் முகவரிக்கு பட்டாசு பண்டல்கள் வந்து சேரும் என்று கூறியும் பணம் பறிப்பதாக புகார்கள் வருகிறது. இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் வியாபாரிகள் இது குறித்து போலீசில் புகார் செய்யாமல் இருப்பது தான் இது போன்ற மோசடிகள்அதிகரிக்க வாய்ப்பாக இருக்கிறது.
சிவகாசி பஸ் நிலையத்தின் வெளியே அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணிவரை இந்த புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இது போன்ற புரோக்கர்கள் மூலம் பட்டாசு வாங்கிச் சென்றால் அந்த பட்டாசு தரமானதாக இருக்காது என்ற உண்மை அந்த வெளியூர் வியாபாரிகளுக்கு ஏமாந்த பின்னர் தான் தெரியவருகிறது.
எனவே வெளி மாநில, வெளியூர் பட்டாசு சில்லரை வியாபாரிகள் சிவகாசியில் உள்ள சில புரோக்கர்களின் வலையில் சிக்காமல் இருக்க பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிவகாசி பகுதியில் பல இடங்களில் தரமற்ற பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தரமான பட்டாசுகளை வாங்கிகடையில் வைத்து விற்பனை செய்து வரும் 700 மொத்த வியாபாரிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற பட்டாசுகள் உடனுக்குடன் விற்பனையாவதால் அதை தொடர பலர் முன்வருகிறார்கள். இதை தடுக்கவும் போலீசார் சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு பட்டாசு பண்டல்களை கொண்டு செல்லும் லாரி செட்டுகளில் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். மேலும் சாத்தூர் ரோடு, திருத்தங்கல் ரோடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து தரமற்ற பட்டாசுகள் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story