திருச்சி அருகே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு நடுவழியில் நிறுத்தப்பட்டது


திருச்சி அருகே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு நடுவழியில் நிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 3:38 PM GMT)

மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

திருச்சி,

சென்னை-மதுரை, மதுரை- சென்னை இடையே வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலின் அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்கைகளும் நவீனமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த ரெயில் திருச்சி மற்றும் கொடைரோடு ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

புகை கிளம்பியது

நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு மாலை 4.50 மணிக்கு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டது.

ஜங்ஷனில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சி.10 பெட்டியின் கழிவறைப்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. அந்த பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி எச்சரிக்கை அலாரமும் ஒலித்தது.

பயணிகள் அதிர்ச்சி

இதனால் தீ பிடித்து விட்டதோ என அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த பெட்டியில் இருந்து தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு அடுத்த பெட்டிக்கு ஓடினர். ரெயில் முழுவதும் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் என்ஜின் டிரைவர் திருச்சி அருகே ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

உடனடியாக தொழில் நுட்ப குழுவினர் புகை கிளம்பிய சி.10 பெட்டிக்கு வந்து மின்சார கசிவு எதுவும் ஏற்பட்டதா என சோதனை செய்தனர்.

சிகரெட் பிடித்ததால்...

ஆனால் மின்சார கசிவு எதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் அவர்களுக்கும், பயணிகளுக்கும் நிம்மதி ஏற்பட்டது. கழிவறைக்கு சென்று பார்த்த போது ஒரு சிகரெட் துண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயணி ஒருவர் சிகரெட் பிடித்ததால் அதில் இருந்து வெளியேறிய புகையால் வந்த வினை தான் இவ்வளவுக்கும் காரணம் என்பது தெளிவானது.

இதனைத்தொடர்ந்து தொழில்நுட்ப குழுவினர், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருப்பதால் கழிவறையில் இருந்து சிகரெட் பிடித்தாலும் புகை வெளியே செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் இதுபோன்ற தேவை இல்லாத பிரச்சினை ஏற்படும். எனவே யாரும் புகை பிடிக்காதீர்கள் என கூறி எச்சரிக்கை செய்தனர்.

இந்த சம்பவத்தினால் சுமார் 15 நிமிடத்திற்கு பின்னர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த இடத்தில் இருந்து கிளம்பி சென்னைக்கு சென்றது.


Next Story