திருச்சி அருகே வாய்க்காலில் பிடிபட்ட 10 அடி நீள ராட்சத முதலை கல்லணையில் விடப்பட்டது


திருச்சி அருகே வாய்க்காலில் பிடிபட்ட 10 அடி நீள ராட்சத முதலை கல்லணையில் விடப்பட்டது
x
தினத்தந்தி 10 Oct 2019 4:30 AM IST (Updated: 9 Oct 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே வாய்க்காலில் பிடிபட்ட 10 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் கல்லணையில் விட்டனர்.

திருச்சி,

திருச்சியை அடுத்த திருப்பராய்த்துறை தபோவனம் பகுதியில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். வனத்துறை அதிகாரிகளிடமும் இதுபற்றி புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் தபோவனம் அருகில் உள்ள வாய்க்காலில் பொக்லைன் எந்திரத்தை சுத்தப்படுத்தும் பணியில் நேற்று முன்தினம் சிலர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது புதரில் இருந்து ஒரு ராட்சத முதலை வெளியே வந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் அங்கு வந்து முதலையை பிடிக்க முயன்றனர். வனத்துறை அதிகாரிகளும் மாவட்ட வன அதிகாரி சுஜாதா உத்தரவின் படி அங்கு வந்தனர்.

கிராம இளைஞர்கள் ஒத்துழைப்புடன் வனத்துறையினர் அந்த முதலையை பிடித்து கம்பில் வைத்து கயிறால் கட்டினார்கள். அந்த முதலை சுமார் 10 அடி நீளம் இருந்தது.

அதன் எடை சுமார் 300 கிலோ இருக்கும். முதலை பிடிப்பட்ட தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து வன உயிரின நல அதிகாரிகள் ராமகிருஷ்ணன் என்பவர் தலைமையில் வந்து முதலையை யாரும் அடித்து கொல்ல விடாமல் பார்த்துக்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் அந்த முதலைக்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம இளைஞர்கள் பாதுகாப்பு கொடுத்தனர். நேற்று காலை அந்த முதலையை பொதுமக்கள் உதவியுடன் வனசரக அலுவலர் மாதேஸ்வரன், வனவர் கோடீஸ்வரன் ஆகியோர் எடுத்துக்கொண்டு கல்லணைக்கு சென்றனர்.

அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் பாசனத்திற்கு பயன்பாடற்ற ஒரு வாய்க்காலில் அந்த முதலையை விட்டனர். கட்டுகள் அவிழ்க்கப்பட்டதும் முதலை வாய்க்காலுக்குள் பாய்ந்து சென்று விட்டது.

Next Story