இரட்டை கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு


இரட்டை கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 4:45 AM IST (Updated: 10 Oct 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தந்தை- மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ளது கீழ வங்காரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், திருப்பதி (50). கோவிந்தராஜின் மைத்துனர்கள் நடராஜன், நாகராஜன் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டனர். இதன்காரணமாக கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கும், திருப்பதி குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் திருப்பதி, அவரது அண்ணன் ஆறுமுகம் (60) ஆகியோர் ஊரை விட்டு வெளியேறி இனாம் சமயபுரத்தில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் கீழ வங்காரம் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை யார் அனுபவிப்பது என்பது தொடர்பாக கோவிந்தராஜின் மகன் துரைராஜ் (62) குடும்பத்தினருக்கும், திருப்பதி குடும்பத்தினருக்கும் இடையே மீண்டு்ம் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 27-5-2015 அன்று பிரச்சினைக்குரிய நிலத்தில் திருப்பதியும், ஆறுமுகமும் கொட்டகை போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த துரைராஜ், அவரது மகன் மதுபாலன் (33), உறவினர் கனகராஜ் (49) ஆகியோர் திருப்பதியையும், ஆறுமுகத்தையும் மண்வெட்டியால் அடித்தும், இரும்பு கம்பியால் குத்தியும் கொலை செய்தனர்.

இதுபற்றி சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜ், மதுபாலன், கனகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி செல்வம் முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. துரைராஜ், மதுபாலன், கனகராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரண்டு பேரை கொலை செய்திருப்பதால் 2 கொலை குற்றத்திற்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் சிறை தண்டனைகளை ஏக காலத்தில் (ஒரு ஆயுள் தண்டனை மட்டும்) அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார். தண்டனை அடைந்தவர்களில் ஒருவரான மதுபாலன் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story