தூத்துக்குடி அருகே, பதுக்கிய 2 டன் பவளப்பாறைகள் பறிமுதல் - 2 பேர் கைது


தூத்துக்குடி அருகே, பதுக்கிய 2 டன் பவளப்பாறைகள் பறிமுதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2019 10:15 PM GMT (Updated: 9 Oct 2019 8:28 PM GMT)

தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்ட 2½ டன் பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே சாயர்புரம் சக்கம்மாள்புரம் கிராமத்தில் உள்ள அலங்கார மீன் பண்ணையில் பவளப்பாறைகள் பதுக்கி வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகர் விமல்குமார், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பாக வனச்சரகர் ரகுவரன், வனவர்கள் கேசவன், மகேஷ். அருண்குமார் ஆகியோர் அந்த பண்ணைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு சுமார் 2½ டன் பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பவளப்பாறைகளை பதுக்கி வைத்ததாக சிவத்தையாபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கர் (வயது 43), செந்தியம்பலத்தை சேர்ந்த ஞானமுத்து மகன் ரூபன்அல்போன்ஸ் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2½ டன் பவளப்பாறைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பவளப்பாறைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story