வேடசந்தூர் அருகே, அரசு பஸ்சை சிறைப்பிடித்த கல்லூரி மாணவர்கள்
வேடசந்தூர் அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அரசு உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வேடசந்தூர், எரியோடு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். ஆனால் காலை, மாலை வேளைகளில் கல்லூரிக்கு செல்வதற்கு அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை.
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அய்யலூரில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் கல்லூரி முன்பு நின்றது. அப்போது பஸ்சில் சிலரை மட்டும் ஏற்றிவிட்டு மாணவிகளை ஏற்றாமல் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் அந்த பஸ்சை சிறை பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் கல்லூரி முன்பு பஸ்சை நிறுத்தி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பஸ்சை மாணவ-மாணவிகள் விடுவித்தனர். அதன்பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும் போக்குவரத்து சீரானது.
வேடசந்தூர் அருகே அரசு பஸ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் சிறைப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை, மதியம், மாலை நேரங்களில் வேடசந்தூர், எரியோட்டில் இருந்து கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story