கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, மதுபான கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, மதுபான கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 10:15 PM GMT (Updated: 10 Oct 2019 6:25 PM GMT)

கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம்,

கம்பத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கம்பம் புதிய பஸ்நிலையத்தின் மதுபான கடை உள்ளது. இந்த கடையின் அருகே குடியிருப்புகள், பள்ளிக்கூடம் உள்ளன. மேலும் அந்த இடம், பொதுமக்கள் அதிகளவு கூடும் பகுதி ஆகும். அங்கு மதுபான கடை திறந்திருப்பது, தமிழ்நாடு மது விற்பனை சட்டத்துக்கு எதிரானது.

எனவே கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மதுபான கடையை உடனடியாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மதுபான கடையை திறக்க இடைக்கால தடை விதித்தது. அதன்படி மதுபான கடை மூடப்பட்டது.

இந்தநிலையில் அந்த இடத்தில், மீண்டும் மதுபான கடையை திறக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து கம்பம் புதிய பஸ்நிலைய பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுபான கடையை திறப்பதற்கான பணிகள் நேற்று நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுபான கடை முன்பு பொதுமக்கள் திரண்டனர்.

பின்னர் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, கீதா, முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மதுபான கடையை திறக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே கோர்ட்டுக்கு சென்று தடை ஆணை வாங்கி வந்தால் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு மதியம் 3 மணி அளவில், போலீஸ் பாதுகாப்புடன் மதுபான கடை திறக்கப்பட்டு விற்பனை களை கட்டியது. குடிமகன்கள் ஆர்வமுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர்.

Next Story