விபத்தில் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்ய பெற்றோர் முயற்சி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை


விபத்தில் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்ய பெற்றோர் முயற்சி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 11 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே விபத்தில் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்ய பெற்றோர் முயற்சித்தனர். அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்த சுந்தரம் மகன்கள் ராமமூர்த்தி (வயது 24), சுந்தரமூர்த்தி (21). இவர்கள் 2 பேரும் கடந்த 5-ந் தேதி இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் இருந்து சோழம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே மூவலூர் மெயின்ரோட்டில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சுந்தரமூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த ராமமூர்த்தி லேசான காயம் அடைந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரமூர்த்தி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சுந்தரமூர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

அடக்கம் செய்ய முயற்சி

இதனை தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த பெற்றோர், அவரது உடலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் இறந்துபோன சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம், ஏற்கனவே விபத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இறந்ததால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சுந்தரமூர்த்தியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story