மாவட்ட செய்திகள்

கா‌‌ஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவா? எதிர்ப்பா? ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கேள்வி + "||" + Kashmir cancels special status Of support Opposition Amit Shah questions Rahul Gandhi

கா‌‌ஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவா? எதிர்ப்பா? ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கேள்வி

கா‌‌ஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவா? எதிர்ப்பா? ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கேள்வி
இந்தியாவை ஒருங்கிணைக்கும் வகையில் கா‌‌ஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்று அமித்‌ஷா கூறினார்.
சாங்கிலி,

மராட்டிய மாநிலம் சாங்கிலி, சோலாப்பூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை மந்திரி அமித்‌ஷா பேசியதாவது:-

மாநில மக்கள் மீண்டும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்த வேண்டும். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த மாநில மக்களுக்காக என்ன செய்துள்ளது. அவர்களது தோல்வி உறுதியாகிவிட்டது.


மீண்டும் பிரதமரானதும் மோடி நாடாளுமன்றத்தில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அறிவித்தார். கா‌‌ஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற வல்லபாய் பட்டேலின் கனவு இன்று நனவாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கா‌‌ஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடே விரும்பும்போது நீங்கள் எதிர்ப்பது ஏன்? ஓட்டு வங்கிக்காக நீங்கள் அரசியல் செய்கிறீர்கள்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் கா‌‌ஷ்மீரில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் பொய் பிரசாரம் செய்துவருகிறார்கள். மோடி ஐ.நா. சபைக்கு சென்றபோது ஒட்டுமொத்த உலகமே இந்த பிரச்சினையில் அவருக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டது.

1971-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அன்றைய பாகிஸ்தான் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு (வங்காளதேசம் உருவானது) இந்திரா காந்திக்கு வாஜ்பாய் தான் முதலில் வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேச நலனே எங்களுக்கு முக்கியம். ஆனால் நீங்கள் 370-வது சட்டப்பிரிவு ரத்து, துல்லிய தாக்குதல், பாலகோட் வான் தாக்குதல் ஆகியவைகளை எதிர்க்கிறீர்கள்.

ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தால் 10 எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்பதை உலகம் உணர்ந்துள்ளது.

ராகுல் காந்தி விரும்பினால் என்னையோ, எனது கட்சியையோ, மோடியையோ திட்டலாம். நாங்கள் உங்களை ஒன்றும் சொல்லமாட்டோம். ஆனால் பாரத மாதாவை துண்டாட நினைப்பவர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருந்தால், பா.ஜனதா தலைமையிலான அரசு நாட்டை துண்டாட நினைப்பவர்களை சிறையில் தள்ளும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட இப்போது உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த மாற்றத்தை கொண்டுவந்தது மோடி. அவரைவிட அதிக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் மன்மோகன்சிங். ஆனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் மோடி தான். இவ்வாறு அமித்‌ஷா பேசினார்.