அரூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி மேலும் 2 பேர் காயம்


அரூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி மேலும் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 11 Oct 2019 3:45 AM IST (Updated: 11 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள வேப்பம்பட்டி காப்புகாடு என்ற இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அதிக அளவில் மூங்கில் மரங்கள் வளர்ந்து இருந்தன.

இந்தநிலையில் காய்ந்த மூங்கில் மரங்களை ஏலம் விட்டனர். இதை ஈரோடு அந்தியூரை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்தார். பின்னர் மூங்கில் மரங்கள் வெட்டும் பணி தொடங்கியது. அதன்படி மல்லூத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்னல் தாக்கி பலி

நேற்று மாலை அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். அப்போது ராஜி (வயது 55) என்ற தொழிலாளி மீது மின்னல் தாக்கியதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் சின்னப்பையன் (40), திருப்பதி (30) ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. 2 பேரையும் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story