கம்யூனிஸ்டுகளின் ஆட்சியால்தான் சீனா வல்லரசாக உயர்ந்தது தர்மபுரி மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு


கம்யூனிஸ்டுகளின் ஆட்சியால்தான் சீனா வல்லரசாக உயர்ந்தது தர்மபுரி மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 8:44 PM GMT)

கம்யூனிஸ்டுகளின் ஆட்சியால்தான் சீனா வல்லரசாக உயர்ந்து உள்ளது என்று தர்மபுரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

தர்மபுரி,

காவிரி, தென்பெண்ணை ஆறுகளின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜோதிபாசு வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, முத்து, மாரிமுத்து, நாகராஜன், சிசுபாலன், ஆறுமுகம் மல்லையன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டத்தில் முறையான பாசனவசதியோ, தொழிற்சாலைகளோ இல்லை. இங்கு விவசாயத்தை காப்பாற்ற காவிரி ஆற்றின் உபரிநீரை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் வசிப்பவர்களில் 85 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். சாதி மோதல்களால் இந்த மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை தடுத்து நிறுத்தவும், இந்த மக்களை ஒன்று திரட்டி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்தி கோரிக்கைகளை வென்றெடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து பாடுபடும்.

தேர்தல் செலவு

இந்தியாவில் 100 கார்ப்பரேட் தொழிலதிபர்களின் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கும் மத்தியஅரசு 40 கோடி ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்குகிறது. தற்போது அந்த திட்டத்தையும் சரியாக செயல்படுத்தவில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்ற சீனா 152 கோடி மக்கள்தொகையுடன் வல்லரசாக வளர்ந்து இருப்பதற்கு அங்கு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடப்பதே முக்கிய காரணம். 540 வகையான ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் சீனாவில் வறுமைகோட்டிற்கு கீழ் இருப்போரின் எண்ணிக்கை 1 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தி.மு.க.வினருக்கு தேர்தல் செலவுக்காக கொடுக்க வேண்டிய தொகையை அக்கட்சியினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மூலமாக கொடுத்தனர். அந்த பணத்தை நாங்கள் சொந்த செலவிற்கு எடுத்துக்கொள்ளவில்லை. பயன்படுத்தவும் இல்லை. வேறு கட்சியிடம் நிதி வாங்கிதான் கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இல்லை. தேர்தல் செலவுக்கான தொகையை அரசியல் கட்சிகள் வங்கிகள் மூலமாகவே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் 8-வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story