மனைவியை எரித்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை எரித்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 8:47 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை எரித்துக்கொன்ற விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர், 

பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் அக்ரகார தெருவைச்சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் தாமஸ் (வயது40). விவசாயியான இவர் அதே ஊரை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான விஜயகுமாரியை(32) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உதயலட்சுமி(12) என்ற மகளும், யுவராஜ்(10) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தாமஸ் தனது மனைவி விஜயகுமாரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் விஜயகுமாரி தனது கணவருடன் வாழப்பிடிக்காமல், தனது பிள்ளைகளுடன் சென்னை மறைமலை நகரில் உள்ள தனது பெரியம்மா சரஸ்வதி வீட்டுக்கு சென்று விட்டார். சென்னையில் அவர் கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-3-2018 அன்று விஜயகுமாரி தனது பிள்ளைகளுடன் சொந்த ஊரான ஒறையூரில் உள்ள அப்பா வீட்டுக்கு பங்குனி உத்திர திருவிழாவுக்காக சென்றார். விஜயகுமாரியின் அப்பா வீட்டுக்கு 3 வீடுகள் தள்ளி வெங்கடேசன் என்பவரது வீட்டில் தாமஸ் குடியிருந்து வந்தார். திருவிழா முடிந்து பிள்ளைகளுடன் சென்னைக்கு செல்வதற்காக விஜயகுமாரி, கடந்த 2-4-2018 அன்று காலை 11 மணிக்கு தனது அப்பா வீட்டின் வாசலில் இருந்த போது, தாமஸ், அங்கு சென்று, விஜயகுமாரி மீது பெட்ரோலை ஊற்றி தீக்குச்சியை கொளுத்திப் போட்டார். இதில் விஜயகுமாரி உடலில் தீப்பிடித்து எரிந்தது.

தீயில் கருகி பலத்த காயம் அடைந்த விஜயகுமாரியை சிகிச்சைக்காக ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 8-4-2018 அன்று பரிதாபமாக செத்தார்.

இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தாமசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மகாலட்சுமி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், மனைவியை எரித்து கொலை செய்த குற்றத்துக்காக தாமசுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story