ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை; கலாம் மணிமண்டபம் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியது


ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை; கலாம் மணிமண்டபம் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 2:02 PM GMT)

ராமேசுவரம் பகுதியில் பலத்த மழையால் அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

ராமேசுவரம்,

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே நல்ல மழை பெய்தது. சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டியதுடன் அதன் பின்பு லேசான மழை பெய்து கொண்டிருந்தது.

அதேநேரத்தில் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம்–தங்கச்சிமடம் இடையே உள்ள அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதேபோல் பாம்பன் ரோடு பாலத்தின் சாலையிலும் மழை நீரானது ஆறு போல் பெருக்கெடுத்து ஒடியது.

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு சாலையில் மழைநீர் தேங்குவது தொடர்ந்து வருகின்றது. ஆகவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே இந்த ஆண்டு ராமேசுவரம் பகுதியில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், பருவ மழைக்கு பின்னரும் அதிகமான மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story