ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:15 AM IST (Updated: 12 Oct 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக் கணித்து வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வேதியியல் துறை பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆரோக்கியநாதன் என்பவரை அதே பள்ளியில் பிளஸ்-2 பொது எந்திரவியல் படித்து வரும் அஜித்குமார் என்கிற மாணவன் தாக்கியுள்ளார். வேதியியல் துறை வகுப்பறையில் ஆசிரியர் ஆரோக்கியநாதன் பாடம் நடத்தும்போது பொது எந்திரவியல் மாணவர்களில் சிலர் வகுப்பறைக்கு வெளியில் பின்புறம் உள்ள சிமெண்டு கட்டையில் அமர்ந்து வகுப்பறையில் உள்ள மாணவிகளை பார்ப்பதும், கேலி செய்வதுமாக இருப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இதைப்பார்த்த ஆசிரியர் ஆரோக்கியநாதன் தனது வகுப்பு மாணவிகளிடம், நீங்கள் அவர்களை பார்க்க வேண்டாம். அவர்கள் இப்படித்தான். இதனால் உங்கள் பாடத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் எனக்கூறி அவர்களை திட்டியுள்ளார். ஆசிரியர் திட்டியதை அந்த வகுப்பில் படித்த மாணவர்கள் சிலர் வெளியில் சிமெண்டு கட்டையில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தெரிந்துகொண்ட அந்த மாணவர்களில் ஒருவரான அஜித்குமார் தன்னுடன் படிக்கும் 5 மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறைக்குள் புகுந்து நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் வேதியியல் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் ஆரோக்கியநாதனை பார்த்து ஏன் எங்களை திட்டினீர்கள் என ஒருமையில் பேசி பாடம் நடத்தவிடாமல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியர் பேசியது உண்மை தான். நீங்கள் செய்த தவறை தானே சொன்னேன் என கூறி மாணவன் அஜித்குமாரை அடித்து அனைவரையும் வெளியேறும்படி கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அஜித்குமார் ஆசிரியரை திருப்பி தாக்கியுள்ளார். மற்ற மாணவர்களும் அடிக்க முயன்றபோது ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறிவிட்டார். இதனை பார்த்த மாணவ- மாணவிகள் அனைவரும் ஆசிரியரை தாக்கிய எந்திரவியல் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி வளாகத்துக்கு எதிர்ப்புறம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வகுப் பறைக்கு செல்லும்படி கூறியதால் மாணவ- மாணவிகள் பள்ளி சுற்றுச் சுவருக்கு உள்ளே வந்தனர். பின்னர் வகுப்புகளை புறக்கணித்து தலைமை ஆசிரியர் அறைக்கு எதிர்புறம் வெட்டவெயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவ- மாணவிகள் கூறுகையில், பள்ளி ஆசிரியரை தாக்கிய எந்திரவியல் பயிலும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர்கள் முறையாக வகுப்பறை நடத்திக்கொண்டிருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது, ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் போதும் வருகை பதிவேடு பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறினர். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு மாணவ- மாணவிகள் மரத்தடி நிழலில் ஒதுங்கி உட்கார்ந் திருந்தனர்.

தொடர்ந்து சகஆசிரியைகள் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த தவறு நடந்து வருவதாகவும், பெண்கள் கழிப்பறையில் கற்களை கொண்டு மாணவர்கள் அடிப்பதாகவும், வெடி வெடிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஹரிசெல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின்படி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய அஜித்குமார் உள்ளிட்ட 6 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் கூறினார். ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story